ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு

Published On 2021-11-17 03:29 GMT   |   Update On 2021-11-17 03:29 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் தொடங்கிய நிலையில், தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல பூஜைக்கான வழிபாடுகள் தொடங்கின. அதிகாலை 4 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம் மற்றும் களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு படி பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் காலை நடை திறக்கப்பட்டதும், சாமி தரிசனம் செய்த கேரள தேவஸ்தான துறை மந்திரி கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலையில் தரிசனத்திற்கு இதுவரை 13 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி 30 ஆயிரம் பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அப்பம், அரவணை தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. தட்டுப்பாடு இன்றி பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு புனித பிரசாதமாக அப்பம், அரவணை தயாரிப்பு பணிகள் முழுவதும் தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி கட்டுப்பாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அப்பம், அரவணை ஆகியவை முற்றிலும் ஹலால் செய்யப்பட்ட சர்க்கரை மூலமாக தயாரிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, ஹலால் செய்யப்பட்ட அப்பம், அரவணை என பாக்கெட்டில் எழுதப்பட்டிருப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News