செய்திகள்
ஈரோட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தக்காளி பழங்களை காணலாம்

ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-10-09 07:26 GMT   |   Update On 2021-10-09 07:26 GMT
ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாக பகுதியில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் விலை உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள காரணத்தால் தக்காளி வரத்து குறைந்து விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தற்போது நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 1,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடு என உயர தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மளிகை கடைகளில் சில்லரை விற்பனையாக ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்கப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களிலும் இதே நிலைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News