செய்திகள்
ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி

Published On 2021-09-09 10:53 GMT   |   Update On 2021-09-09 10:53 GMT
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஈரோடு:

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக இருந்தபோது தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தொற்று அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தினார்கள். மேலும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வழக்கமாக போடப்படும் மையங்களை தவிர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார்.

இந்த பணிகள் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 10 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி தடையின்றி செலுத்தப்படுகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 5 நகர்புற சுகாதார மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 198 இடங்களில் 25 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News