தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Published On 2022-01-15 02:59 GMT   |   Update On 2022-01-15 02:59 GMT
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அவனியாபுரம்:

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3-வது நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
 
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ளன. ஆனாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையான நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. சீறிவரும் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் உள்ளனர். முதல் சுற்றில் 50 காளையர்கள் களமிறங்கி உள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 150 உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Tags:    

Similar News