செய்திகள்
சோமாசிபாடியில் நடந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து, தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மனுக்கள் பெற்றுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித்தொகைக்கான மனுக்கள் பெறும் முகாம்

Published On 2021-09-09 12:34 GMT   |   Update On 2021-09-09 12:34 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெறுவதற்கு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெற மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தாசில்தார் சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறுவதற்கான 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் வருவாய் ஆய்வாளர்கள் ரேவதி, வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் கோபால், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை நகர கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் நன்றி கூறினார்.

கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் நேற்று பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. ஆரணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 116 கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் கோட்டீஸ்வரி குமரவேல், கீதாசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் கணபதி வரவேற்றார்.

இதில் அய்யம்பாளையம் தலைவர் கற்பகம் சேகர், பாளையஏகாம்பர நல்லூர் தலைவர் சித்ரா ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா சோமாசிபாடி வருவாய் உள்வட்டத்தைச் சேர்ந்த 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் வழங்கப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகைக்கான மனுக்கள் பெறும் முகாம் சோமாசிபாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தாசில்தார் வைதேகி, வட்ட வழங்கல் அலுவலர் சீத்தாராமன், வருவாய் ஆய்வாளர் ரதிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சோமாசிபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரயு காயத்ரி, பொலக்குணம் ஊராட்சி மன்ற தலைவர் குப்புஜெயக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

செங்கத்தை அடுத்த இறையூர் கிராமத்தில் நடந்த முகாமில் இறையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 26 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. செங்கம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். தாசில்தார் மனோகரன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

முகாமில் பல்வேறு உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் குணாநிதி, கிருஷ்ணன், ராஜாராம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பெரிய கொழப்பலூர் பிர்க்காவில் நடந்த முகாமுக்கு கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஹரிதாஸ் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்

இதில் 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு 64 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான மனுக்கள் மற்றும் முதல்-அமைச்சரின் கல்வி திட்டம், உழவர் பாதுகாப்புதிட்டம் பெறுவதற்கான மனுக்கள் கொடுத்தனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ரகுராமன், ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா அலுவலகங்கள் மூலம் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
Tags:    

Similar News