ஆன்மிகம்
லூக்கா

லூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு

Published On 2019-11-05 04:22 GMT   |   Update On 2019-11-05 04:22 GMT
லூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு. விவிலியத்திலுள்ள அத்தனை நூலாசிரியர்களிலும் யூதர் அல்லாத, பிற இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு எழுத்தாளர் இந்த லூக்கா தான்.
‘லூக்கா’ நூலை எழுதியவர் பெயர் லூக்கா.

லூக்காவுக்கு ஒரு சிறப்பு உண்டு. விவிலியத்திலுள்ள அத்தனை நூலாசிரியர்களிலும் யூதர் அல்லாத, பிற இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு எழுத்தாளர் இந்த லூக்கா தான்.

சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவில் பிறந்தவர். இவர் லூக்கா நற்செய்தியை பிற இன மக்களுக்காகவே எழுதினார். அதனால் பல எபிரேய, அராமிக் சொற்களை இந்த நூலில் தவிர்த்திருப்பார்.

இவர் பிறந்த அந்தியோக்கியாவில் தான் பிற்காலத்தில் பிற இனத்தவருக்கான முதல் திருச்சபை உருவானது. ‘கிறிஸ்தவர்கள்’ எனும் சொல் தோன்றியதும் இங்கே தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லூக்கா மருத்துவராக இருந்தார் என்பது சிறப்புச் செய்தி. அவரது நற்செய்தியில் பல இடங்களில் அந்த ‘டாக்டர் முகம்’ அவரை அறியாமலேயே வெளிப்படுவதையும் காண முடியும்.

நோய் தீரும் புதுமைகளின் மீது அவர் ஆர்வம் காட்டினார். அதனால் தான், இயேசுவின் பிறப்பை மிக விரிவாக, தெளிவாக லூக்கா எழுதினார் என்று கருதப்படுகிறது. மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வை, மருத்துவரைக் கொண்டே எழுத வைத்திருப்பதில் தூய ஆவியானவரின் கரம் விளங்குகிறது.

லூக்கா இயேசுவின் வம்சாவழியைக் குறிப்பிடும் போது, அன்னை மரியாளின் வழியை தேர்ந்தெடுக்கிறார். உண்மையில் இயேசுவை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் மரியா தான். யோசேப்பு வளர்ப்புத் தந்தை தான். மத்தேயு யூதர்களின் ஆண் சிந்தனைப் பார்வையில் யோசேப்பின் வம்சாவழியை எழுத, லூக்கா அத்தகைய கட்டுப்பாடு இல்லாத மனநிலையில் மரியாவின் வம்சாவழியை எழுதுகிறார்.

மருத்துவப் பார்வை தவிர்த்து, வரலாற்றுப் பார்வையும் லூக்காவின் எழுத்துகளில் மிளிர்கின்றன. இவரது எழுத்துகளின் மூலமாக வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை இணைத்துப் பார்க்க முடிகிறது.

லூக்கா பயணங்களில் அனுபவமுடையவர். பவுலுடன் சேர்ந்து பயணம் செய்தவர். இவர் தான் ‘திருத்தூதர் பணிகள்’ நூலையும் எழுதினார். இவருடைய பயண அனுபவங்களையும் இவருடைய எழுத்துகளில் காண முடியும். இவர் இயேசுவை நேரடியாகச் சந்தித்ததில்லை. எனவே பவுல், மற்றும் இயேசுவோடு நேரடியாகப் பழகியவர்களிடமிருந்து இந்தத் தகவல்களை அவர் பெற்றிருக்கிறார். கூடவே ‘மாற்கு’ நற்செய்தி நூலும் அவருக்கு பெரிதும் துணைபுரிந்திருக்கிறது.

ஒரு சிறந்த எழுத்தாளராகவும் லூக்கா பரிமளிக்கிறார். சிறப்பான வார்த்தைப் பிரயோகங்களும், அற்புதமான நடையும் இவரது நூலை மிகச்சிறந்த இலக்கிய நூலாகவும் கருதச் செய்கிறது. இவரது நூலின் மையமாக இழையோடும் ‘மீட்பு’ எனும் சிந்தனையும் நூலை செழுமையாக்குகிறது.

லூக்கா நற்செய்தியிலுள்ள சில நிகழ்வுகள் மிகவும் பிரசித்தமானவை. கிறிஸ்தவ உலகம் நன்கு அறிந்தவை. உதாரணமாக ஊதாரி மைந்தன், சக்கேயு, மரியா மார்த்தா போன்ற நிகழ்வுகள் தனித்துவமானவை.

“பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்” போன்ற சில இயேசுவின் வசனங்கள் லூக்கா நற்செய்தி யில் மட்டுமே காணப்படுகிறது.

லூக்கா நற்செய்திக்கு மேலும் சில தனித்தன்மைகள் உண்டு. மரியாவின் பார்வையில் இயேசுவின் பிறப்பையும், அது சார்ந்த நிகழ்வுகளையும் லூக்கா மட்டுமே தருகிறார். இயேசு பன்னிரண்டாவது வயதில் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வை லூக்கா மட்டுமே தருகிறார். அந்தக் காலத்தில் பன்னிரண்டு வயது நிரம்பும் ஆண்மகன் ஆலயத்தில் சென்று ஏட்டுச் சுருளை வாசித்தபின் பெரியவனாக அங்கீகரிக்கப்படுவான். அதன்பின் அவனுக்கு சொந்தமாய் முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பது யூத மரபு.

அதேபோல இயேசு திருமுழுக்கு பெற்றபின் ‘செபம் செய்துகொண்டிருந்த போது’ தூய ஆவியானவர் வருகிறார் எனும் சிறப்புச் செய்தியை லூக்கா தருகிறார்.

நல்ல சமாரியன் உவமை, பரிசேயரும் வரிதண்டுவோரும் உவமை, தொடர்ந்து வேண்டும் விதவை, காய்க்காத அத்தி மரம், ஏழை லாசர் கதை, ஆடையைத் தொடும் பெண், பத்து தொழுநோயாளிகள், விதவையின் காணிக்கை உட்பட பல முக்கியமான செய்திகள் லூக்கா நற்செய்தியில் மட்டும் எழுதப்பட்டுள்ளன.

பிற இனத்தாரை வசீகரிக்கும் முக்கிய நிகழ்வுகளை லூக்கா கவனமாய்ப் பதிவு செய்கிறார். நலம் பெற்றுத் திரும்பி வந்து நன்றி செலுத்தும் ஒரே தொழுநோயாளன், பிற இனத்தவன் என்கிறார். பிற இனத்தாருக்கு அதிக விசுவாசம் இருக்கிறது என குறிப்பிடுகிறார். இடையர்கள் வந்து இயேசுவைப் பணிந்து கொள்வதை விவரிக்கிறார்.

‘ஏழைகள் பேறுபெற்றவர்கள், ஏழைகளுக்கு உதவுங்கள், ஏழைகளோடு உணவருந்துங்கள், ஏழைகளைக் கவனியுங்கள்’ என ஏழைகளின் சார்பாக நின்று லூக்கா பல இடங்களில் பேசுகிறார். அதே போல பாவிகளின் சார்பாக இயேசு நிற்கிறார் என்பதையும் லூக்கா கவனமாய் பதிவு செய்கிறார்.

‘உலக முழுவதுக்கும் இறைமகன் இயேசுவே மீட்பர்’ எனும் அடிப்படைச் சிந்தனையை லூக்கா விதைக்கிறார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த லூக்கா, தனது 84- வது வயதில் கிரேக்க நாட்டிலுள்ள பியோஷன் என்னுமிடத்தில் மறைந்தார் என்கிறது வரலாறு.

தவற விடக்கூடாத நற்செய்தி நூல் லூக்கா.

சேவியர்
Tags:    

Similar News