செய்திகள்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பையில் கைது

Published On 2019-07-10 09:50 GMT   |   Update On 2019-07-10 09:50 GMT
அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திப்பதற்காக மும்பை சென்ற கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார், ஓட்டல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
மும்பை:

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். கட்சி தலைமை எவ்வளவோ சமாதானம் கூறியும், அவர்கள் ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளனர். ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக, கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றார். அந்த ஓட்டலில் ஒரு அறை முன்பதிவு செய்திருப்பதாகவும், எம்எல்ஏக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், டி.கே.சிவக்குமார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன்பு, ஜேடிஎஸ் தலைவர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டலில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களும், டிகே சிவக்குமாரை சந்திக்க விரும்பவில்லை. முதல்வர் மற்றும் சிவக்குமார் வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில், மந்திரி டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை ஓட்டலில் இருந்து வெளியேற்றினர். அவர் முன்பதிவு செய்த அறையை ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்தது. ஆனால், எம்எல்ஏக்களை சந்திக்காமல் ஓட்டலை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று கூறிய சிவக்குமார், ஓட்டல் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மந்திரி சிவக்குமார் மற்றும் அவருடன் இருந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News