ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-01-20 07:06 GMT   |   Update On 2021-01-20 07:06 GMT
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா நேற்று காலையில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் மயில் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க 9 கலச புனித தீர்த்தம் கொண்டு கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சர விளக்கு தீபங்கள் கொண்ட பூஜைகள் நடந்தன. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சுவாமி புறப்பாடும் நடந்தது. மூலவர் சுவாமி, வித்தக விநாயகர், வேல் சன்னதியிலும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்துகொண்டு நெய் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

இன்று காலையில் உற்சவர் சுவாமிக்கு மகா அபிஷேகங்களும், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், மாலையில் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அன்னம் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து நாளை மாலையில் காமதேனு வாகனத்திலும், 22-ந்தேதி மாலையில் ஆட்டு கிடாய் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

23-ந்தேதி மாலையில் பூச்சப்பர விழாவும், 24-ந் தேதி மாலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 25-ந்தேதி மாலையில் பல்லக்கு வாகனத்திலும், 26-ந்தேதி மாலையில் குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

27-ந்தேதி காலை 10 மணிக்கு தங்க தேரோட்ட விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறும். 28-ந்தேதி காலையில் முக்கிய நிகழ்வான தைப்பூச திருவிழா நடக்கிறது. அன்று யாக சாலை பூஜைகள், தீர்த்தவாரி சிறப்பு அபிஷேகம், 10.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

11 மணிக்கு கொடி இறக்கம், தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் மாலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும், இருப்பிடம் சேருவதும் நடைபெறும். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News