செய்திகள்
மரணம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை- வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பலி

Published On 2020-12-03 07:55 GMT   |   Update On 2020-12-03 07:55 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பசுந்தளிர் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பலியாகினார்.
வேப்பந்தட்டை:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று இரவு பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. வேப்பந்தட்டை பகுதியில் இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. இந்த நிலையில் வேப்பந்தட்டை பசுந்தளிர் கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பலியாகினார்.

பசுந்தளிர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திருச்சடை மற்றும் அவரது குழந்தைகள் பசுந்தளிர் கிராமத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று இரவு வழக்கம் போல் தாயும், குழந்தைகளும் சாப்பிட்டு விட்டு இரவு படுத்து தூங்கினர். இந்த நிலையில் நள்ளிரவு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் வெங்கடேசனின் 7 வயது மகள் யோஜனா சிக்கிக் கொண்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

அருகில் படுத்திருந்த அவரது திருச்சடை மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் தப்பினர். மழையில் சுவர் நனைந்து இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது.

தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் தாசில்தார் கிருஷ்ணராஜ் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மழையினால் வீடு இடிந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News