செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருவாரூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாமில் 29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Published On 2021-09-20 14:18 GMT   |   Update On 2021-09-20 14:18 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட முகாமில் 29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் மாபெரும் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் திருவாரூர் அருகே பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி ஒன்று தான் சிறந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசியாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 பேருக்கும், 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 179 பேருக்கும் ஆக மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாம் மூலம் 29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காக நிர்ணயித்து 319 இடங்களில் மாபெரும் இரண்டாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் பாலசந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி 102 பேருக்கு போடப்பட்டது. அனைவருக்கும் மரக்கன்றுகளை மன்ற நிர்வாகி அருள்செல்வன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், கருப்பையன், அமலதாஸ், மாரியம்மாள், முகுந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவாரூர் ஒன்றியம் பழவனக்குடி ஊராட்சி மொச்சைக்குடி ஊராட்சி பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த கிராம பகுதி மக்கள் 76 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 55 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் ஆக மொத்தம் 131 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் செவிலியர், பழவனக்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகரன், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News