செய்திகள்
புகார் பெட்டி

குறை தீர்க்கும் கூட்டம் ரத்தானதால் கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் போட்டு சென்ற பொதுமக்கள்

Published On 2021-03-01 10:59 GMT   |   Update On 2021-03-01 10:59 GMT
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

திருப்பூர:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை மட்டும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்றுவந்தார்.

மேலும் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனுக்குடன் சரிசெய்ய ஆணையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்திற்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படிதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே கொரோனா பரவலால் பல மாதமாக ரத்து செய்யபட்ட குறைதீர்க்கும் கூட்டம் தற்போது தான் மீண்டும் நடைபெற ஆரம்பித்தது. இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பால் மீண்டும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக் கைகளை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவல் தெரியாமல் வழக்கம் போல் இன்று ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு தங்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் உங்களது கோரிக்கைகளை இந்தப் பெட்டியில் போட்டு செல்லும்படி கூறினர். அதன்படி கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் போட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News