செய்திகள்
வடுமாங்காய்

வடுமாங்காய் விளைச்சல் இல்லாததால் மலைவாழ் மக்கள் கவலை

Published On 2021-06-04 05:20 GMT   |   Update On 2021-06-04 05:20 GMT
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டு கன்னி மாங்காய் என்கிற வடுமாங்காய் விளைச்சல் இல்லாததால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
உடுமலை:

உடுமலை அருகே சுமார்  25 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் உள்ளது மேற்குத் தொடர்ச்சி மலை. இங்குள்ள 18 செட்டில்மெண்ட் கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், தேன் எடுப்பது, பட்டுப் பூச்சி வளர்ப்பு, மூலிகைப்புல்லில் இருந்து தைலம் தயாரிப்பது உள்ளிட்டவை இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன.

மேலும் விவசாயத்தை பிரதான தொழிலாக  கொண்டு ஏராளமான குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மரங்களில் காய்க்கும் கன்னி மாங்காய்களும் மலைவாழ் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

இதன்படி ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கன்னி மாங்காய் காய்க்கும் சீசன். இதைப் பயன்படுத்திக் கொண்டு மலைவாழ் மக்கள் மாங்காயை பறித்து உடுமலை நகர பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடந்தூர், மஞ்சம்பட்டி, தளிஞ்சி, தளிஞ்சி வயல் என ஒரு சில மலைக் கிராமங்களில் உள்ள மரங்களில் மட்டும் சிறிதளவே கன்னி மாங்காய் காய்த்துள்ளது. 

மேலும்  வழக்கத்துக்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கன்னி மாங்காய் விளைச்சல் முற்றிலும் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மலைவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News