ஆன்மிகம்
இஸ்லாம் வழிபாடு

இறைவனை மட்டுமே சார்ந்து இருப்போம்

Published On 2021-05-04 03:53 GMT   |   Update On 2021-05-04 03:53 GMT
உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.
புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இனாபா’- ‘இறைவனின் பக்கம் திரும்பும் மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. இறைவனின் பக்கம் திரும்புவது இரண்டு விதங்களில் வெளிப்படுகிறது.

1) இறைவன் தன்னை படைத்து பரிபாலிப்பவன் எனும் அடிப்படையில் படைப்பினங்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வு இன்றி, தங்களுக்கு பிரச்சினை வரும்போது இறைவன் பக்கமே திரும்பி, அவனை அழைக்கின்றனர். பிரச்சினை தீர்ந்ததும் அவனை மறந்து, அவனுக்கு மாறு செய்கின்றனர். இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால், அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 30:33)

2) அல்லாஹ் தான் நமது இறைவன் எனும் அடிப்படையில் அவன் பக்கம் அவனது நேசர்கள் திரும்புவது- அன்புள்ள அடிமையின் திரும்புதல் ஆகும்.

இத்தகைய திரும்புதலைத்தான் ரமலான் மாதம் இறையடியார்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இது முகத்தை மட்டுமே திருப்புவது ஆகாது. மாறாக இறைவனை நோக்கி உள்ளத்தை திருப்புவது.

‘ரமலான் மாதத்தில் பிறை 21 -ல் இருந்து 30 வரை இறையில்லத்தில் ஒருவர் இஃதிகாப் இருப்பது, அதாவது உடலை இறைவனுக்கு மட்டுமே சிறைப்படுத்தி வைப்பது போன்றதாகும்’ என இப்னுல் கய்யூம் (ரஹ்) கூறுகிறார்.

உள்ளமும், உடலும், அதன் உறுப்புக்களும் இறைக்கட்டுப்பாடுடன் இறைவனுக்காக மட்டுமே ஒருமுகப்படுத்தி இறைவனை மட்டுமே நோக்க வேண்டும். இத்தகைய தத்துவத்தை இந்த ரமலான் மாதம் எடுத்துரைக்கிறது.

‘நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

இத்தகைய பண்புகளுடன் ஒவ்வொரு நபியும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

‘தாவூத் (அலை) தமது இறைவனிடம் மன்னிப்புக்கோரி குனிந்து விழுந்தவராக (அவன் பக்கம்) திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:24)

‘இன்னும் சுலைமான் (அலை) அவர்களைத் திட்டமாகச் சோதித்தோம்; அவரது சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை போட்டோம்; ஆகவே, அவர் நம்மளவில் திரும்பினார்’. (திருக்குர்ஆன் 38:34)

‘நிச்சயமாக இப்ராகீம் (அலை) சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங் கொண்டவராகவும், (எதற்கும் நம்பால்) திரும்பக் கூடியவராகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 11:75)

‘மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை; அவனையே நான் சார்ந்துள்ளேன்; இன்னும் அவன் பக்கமே திரும்புகிறேன்’ என்று சுஅய்ப் (அலை) கூறினார். (திருக்குர்ஆன் 11:88)

‘அல்லாஹ்வே எனது இறைவன். அவனையே நான் சார்ந்துள்ளேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன், என நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக’ (திருக்குர்ஆன் 42:10)

எனவே, நாம் நமது வாழ்வில் எந்த நிலையிலும் இறைவனையே சார்ந்து இருந்து, அவன் காட்டிய வழியில் வாழ்ந்து நற்பேறுகளைப் பெறுவோம், ஆமின்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

இப்தார்: மாலை 6.39 மணி

நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி
Tags:    

Similar News