செய்திகள்
கொரோனா தடுப்பூசி

9 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

Published On 2021-09-07 23:21 GMT   |   Update On 2021-09-07 23:21 GMT
‘கொரோனா தொற்று தொடர்பாக தேவையான அனைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார்.
சென்னை:

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்
ராதாகிருஷ்ணன்
, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், முதன்மை தேர்தல் அதிகாரி (ஊராட்சிகள்) அருண்மணி, முதன்மை தேர்தல் அதிகாரி (நகராட்சிகள்) தனலட்சுமி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் (முககவசம், கிருமி நாசினி, பேஸ் ஷீல்டு, கையுறை) கொள்முதல் செய்து வழங்குவது குறித்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், மாவட்ட வாரியாக உள்ள கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் தேர்தல் ஆணையருக்கு எடுத்துக் கூறினார். எனவே அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், கலெக்டர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் தேர்தல் ஆணையர் பழனிகுமார் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அவர், ‘கொரோனா தொற்று தொடர்பாக தேவையான அனைத்து உரிய தடுப்பு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

Tags:    

Similar News