செய்திகள்
டைம் இதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம்

டெல்லி விவசாயிகள் போராட்டம் - அட்டைப்படமாக வெளியிட்டது அமெரிக்காவின் டைம் நாளிதழ்

Published On 2021-03-05 20:56 GMT   |   Update On 2021-03-05 20:56 GMT
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறு நாளை எட்டியுள்ளது.
வாஷிங்டன்:

இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் நேற்றுடன் 100-வது நாளை எட்டியது. போராட்டக் களத்தில் இதுவரை 20-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியான திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் கடும் குளிர், மழை, வெயிலை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்து திரும்புவோம் என விவசாயிகள்  கூறி வருகின்றனர். ஆங்காங்கே இருந்தபடி சமைத்து சாப்பிட்டுப் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், பிரபல அமெரிக்க இதழான டைம் பத்திரிகையின் மார்ச் மாதத்திற்கான இதழின் அட்டைப்படத்தில் டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படம் இடம்பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் என குறிப்பிடப்பட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் பெண்கள் பங்குபெற வேண்டாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் குறித்து டைம் இதழ் இந்த அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News