செய்திகள்
மிரட்டல்

திண்டிவனம் அருகே பஞ்.தலைவர் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

Published On 2021-10-09 08:15 GMT   |   Update On 2021-10-09 08:15 GMT
திண்டிவனம் அருகே பஞ்.தலைவர் வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடைபெற்றது. அதன்படி, விழுப்புரம் மாவட்டம் 13 ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். இதில் முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்களர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில், திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் அடுத்த கீழ் கூடலூர் ஊராட்சியில் ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 37) இவர் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த ராஜன் (32) தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனையடுத்து சேகர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து வீடு திரும்பும் பொழுது ராஜன் என்பவர், காரில் வந்த சேகரை தடுத்து நிறுத்தினார். பின்னர் பயங்கர ஆயுதங்களை காட்டி சேகருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் செய்தார். அதில் ராஜன் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும். எனவே தனக்கும் ,தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News