செய்திகள்
சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் வீட்டிற்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-07-17 11:14 GMT   |   Update On 2021-07-17 11:14 GMT
பெரம்பலூரில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்த சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள குளோபர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா(வயது 65). இவர் நேற்று காலை கடைக்கு காய்கறிகள் வாங்கச்சென்றார். பின்னர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றார்.

வீட்டின் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தார்.

இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். மேலும் மர்மநபர் சங்கிலியை பறித்தபோது சகுந்தலாவுக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் திருடர்களின் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது. கடந்த சில நாட்களாக குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் வந்து மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டத்தொடங்கி விட்டனர். இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் திருட்டு சம்பவமும், தனியாக செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவமும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News