ஆன்மிகம்
ச்ர்வ அலங்காரத்தில் வெங்கடேஸ்வர சுவாமி

மேட்டுப்பாளையம் அருகே வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் தேரோட்டம்

Published On 2020-09-28 03:19 GMT   |   Update On 2020-09-28 03:19 GMT
மேட்டுப்பாளையம் அருகே வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென்திருமலையில் வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 18-ந் தேதி அங்குரார்ப்பணத்துடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பின்னர் பெரிய சேஷன், சின்ன சேஷன், அன்ன பட்சி, சிம்மம், முத்துப்பந்தல், கல்பவிருட்சம், கர்வ பூபாளம், கருடன், அனுமந்தன், தங்க ரதம், கஜராஜன், சூரிய பிரபை, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலையில் சிறப்பு அலங்காரத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாதஸ்வர இசை மற்றும் மேள-தாளம் முழங்க மாட வீதியில் தேரில் உலா வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் காலை 10 மணிக்கு தேரானது நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் கே.ஜி. குழும தலைவர் கே.ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ், ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் விஸ்ணுபிரபு, மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, கெ.சு.மணியம், கோபாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News