செய்திகள்
மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் வழங்கிய காட்சி

மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உபகரணங்கள் - கலெக்டர் வழங்கினார்

Published On 2020-12-06 12:31 GMT   |   Update On 2020-12-06 12:31 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் கார்த்திகா வழங்கினார்.
தர்மபுரி:

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கலெக்டர் கார்த்திகா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 164 மாணவ-மாணவிகள் அரசின் நீட் தேர்வு பயிற்சியை பெற்றனர். இவர்களில் 21 பேர் தற்போது மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். அரசு வழங்கியுள்ள சிறப்பான வாய்ப்பை மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

டாக்டர் பணிக்கான கல்வியை எந்தவித அச்சமும், தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் இன்றி நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனுக்குடன் பேராசிரியர்களிடம் கேட்டு உரிய தெளிவைப் பெற வேண்டும். உயர்ந்த எண்ணங்களையும், சேவை மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News