ஆன்மிகம்
கடலில் புனித நீராடிய பக்தர்களை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

Published On 2021-04-15 03:10 GMT   |   Update On 2021-04-15 03:10 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைெபற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சிக்காக கண்ணாடி முன்பு பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கனி கண்டு வழிபட்டனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் பரவலையடுத்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகவும் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இருப்பினும் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News