ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா

Published On 2020-12-21 09:05 GMT   |   Update On 2020-12-21 09:05 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடி மரம் முன்பு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.

முன்னதாக திருத்தேரில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகர் ஆகிய சுவாமிகள் எழுந்தருள்வார்கள். தேர் 4 ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடையும். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அதன் பின்னர் ஆயிரங் கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து லட்சார்ச்சனை, சொர்ணாபிஷேகம், திருஆபரண அலங்கார காட்சியும் நடக்கிறது.

30-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை அமலில் உள்ளது. எனவே, இந்த விழாவில் பக்தர்கள் மூலம் தேர் இழுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பதற்கு பதிலாக டிராக்டர் மூலம் இழுக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசனை கூறியது. ஆனால், இதற்கு கோவில் பொதுதீட்சிதர்கள், நகர மக்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மூலம் தேர் இழுக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
Tags:    

Similar News