செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா காலத்திலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4,467 பிரசவங்கள்

Published On 2020-10-01 20:36 GMT   |   Update On 2020-10-01 20:36 GMT
கொரோனா காலத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4,467 பிரசவங்கள் நடந்துள்ளது. .
சென்னை:

கொரோனா காலத்தில் பல தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டிய நிலையிலும் கூட, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் 4 ஆயிரத்து 467 பிரசவங்கள் நடந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அதற்காக தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து பிரசவம் பார்க்கப்படுகிறது.அந்தவகையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 432 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. ஏப்ரல் மாதத்தில் 601 பேருக்கு பிரசவம் நடந்துள்ளது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மே மாதத்தில் 649 பிரசவத்தில், 31 பேர் கொரோனா நோயாளிகள் ஆவர். ஜூன் மாதத்தில் 684 பேருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் ஜூலை மாதத்தில் 62 கொரோனா நோயாளிகளுடன் 642 பிரசவங்களும், ஆகஸ்டு மாதத்தில் 72 கொரோனா நோயாளிகளுடன் 659 பிரசவங்களும் பார்க்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் 800 பிரசவங்கள் நடந்துள்ளது. இதில் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் செப்டம்பர் 29-ந்தேதி மட்டும் 40 பேருக்கு குழந்தை பிறந்தது. அந்தவகையில் 305 கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் குழந்தை பிறந்து நலமுடன் உள்ளனர். தற்போது மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News