செய்திகள்
தஞ்சையில் வளர்ப்பு நாய் பொன்னிக்கு வளைகாப்பு நடத்திய போது எடுத்த படம்.

தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு- பெண் போலீஸ் நடத்தினார்

Published On 2021-04-22 13:57 GMT   |   Update On 2021-04-22 13:57 GMT
தஞ்சை அருகே வளர்ப்பு நாய்க்கு பெண் போலீஸ் வளைகாப்பு நடத்தினார். விழாவுக்காக வீட்டில் மேடை அமைத்து, மின் விளக்குகளால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டது.
வல்லம்:

கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரசால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டது. இதனால் பொது வெளியில் சுற்றித்திரிந்த நாய்கள் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்கள் உணவுக்காக சுற்றி திரிந்து வந்தது. இதில் வல்லம் போலீஸ் நிலையம் வளாகத்துக்குள் பல நாய்கள் சுற்றி திரிந்தது. அப்போது வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த மைக்கேல்மரியா(வயது36) உணவு இல்லாமல் சுற்றித்திரிந்து நாய்களுக்கு தினமும்தான் கொண்டு வந்த உணவுகளை கொடுத்தார்.

அதில் ஒரு குட்டி நாய் பெண் போலீஸ் மைக்கேல்மரியாவிடம் மிகவும் பாசத்துடன் பழகி வந்தது. இந்த குட்டி நாயை பெண் போலீஸ் மைக்கேல்மரியா தனது வீட்டுக்கு கொண்டு சென்று வளர்த்தார்.

மைக்கேல் மரியா தற்போது பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். மைக்கேல் மரியாவும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் குட்டி நாய்க்கு பொன்னி என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். தற்போது 1½ வயதான பொன்னி கர்ப்பம் அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் மைக்கேல் மரியா நேற்று தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள அவருடைய இல்லத்தில் பொன்னிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். வளைகாப்பு விழாவுக்காக வீட்டில் மேடை அமைத்து, மின் விளக்குகளால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டது.

அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரையும் அழைத்து விமர்சையாக பொன்னிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொன்னியை மேடையில் அமர வைத்து 7 சுமங்கலி பெண்கள் அதற்கு சந்தனமிட்டு, மாலை அணிவித்தனர். கால்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டது. 11 தட்டுக்கள் நிறைய பூ, பழங்கள், வெற்றிலை, இனிப்பு வகைகள், விதவிதமான உணவு வகைகள் மேடையில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நிஜ கர்ப்பிணிக்கு நடப்பது போன்று வளர்ப்பு நாயான பொன்னிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News