செய்திகள்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)

இந்தியாவில் 8 நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை

Published On 2020-05-28 13:10 GMT   |   Update On 2020-05-28 13:10 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றாலும் கடந்த 8 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தியாவில் கடந்த மார்ச் 25-ந்தேதி பொது ஊரடங்கை அமல்படுத்தியது. முதலில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

அப்போது இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் இந்தியா மிகப்பெரிய சேதத்தில் இருந்து தப்பியது என உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்தது.

அதன்பின் ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரை 2-ம் கட்ட 19 நாள் ஊரடங்கை அமல்படுத்தியது. மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள தயாராக இருந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளுக்கு அனுமதி அளித்தது.

அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் மார்ச் 15-ந்தேதி வரை 110 பேருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஜனவரி 30-ல் இருந்து மார்ச் 15-ந்தேதி வரை 100-ஐ தாண்ட 45 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் மார்ச் 29-ந்தேதி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 100-ல் இருந்து ஆயிரத்தைக் கடந்தது. ஆயிரத்தைத் தொட 14 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்த 16 நாட்களுக்குள் (ஏப்ரல் 14-ந்தேதி வரை) 10 ஆயிரத்தை கடந்தது. இதற்கு 16 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது.

மே 7-ந்தேதி 50 ஆயிரத்தை தாண்டியது. இதற்கு 23 நாட்கள் தேவைப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் அடுத்த 12 நாட்களுக்கும் அதாவது மே 19-ந்தேதி ஒரு லட்சத்தை கடந்து விட்டது. 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரத்திற்கு 23 நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில் ஒரு லட்சத்தை தொட 12 நாட்களே ஆனது.

ஆனால் ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சத்தை தொட வெறும் 8 நாட்களே ஆனது. அதாவது மே 19-ந்தேதியில் இருந்து 27-ந்தேதிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.



இதனால் இந்தியா கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவறி விட்டதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இரட்டிப்பாகும் காலம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரையில் கொரோனா தொற்று இருக்கும்போது பலி எண்ணிக்கையின் சதவீதம் 3-க்கு மேல் இருந்தது. தற்போது ஒன்றரை லட்சத்தை தொட்டாலும் பலி எண்ணிக்கை சதவீதம் 2.86 ஆக குறைந்துள்ள சற்று ஆறுதலை அளிக்கிறது.
Tags:    

Similar News