தோஷ பரிகாரங்கள்
சொர்ணமலை கதிர்வேல் முருகன்

பவுர்ணமியில் வழிபட்டால் பிரச்சனைகளை தீர்க்கும் தலங்கள்....

Published On 2022-02-22 05:52 GMT   |   Update On 2022-02-22 05:52 GMT
சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.
* ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார். இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது. மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது. ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள். இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.

* சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலாத்ரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது. செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

* குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும் உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை. இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மலையாகி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும். பின் இந்த மலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேயத்துக் குளித்து வந்தால் குழந்தை இல்லாதவர் களுக்கும் குழந்தை பிறக்கும்.

* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது. இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது. பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.
Tags:    

Similar News