செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்

அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை, ஆக்சிஜன் தேவையை நிர்வகிக்கும் சிறப்பு மையம் தொடக்கம்

Published On 2021-05-01 04:24 GMT   |   Update On 2021-05-01 04:24 GMT
அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய பணிகளையும் இந்த மையம் மேற்கொள்ளும்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை மற்ற துறைகளுடன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் எனப்படும் சிறப்பு மையத்தை அமைத்துள்ளது.

இந்த மையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இன்சூரன்ஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் 60 பேர் பணியாற்றுகிறார்கள்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 104 சுகாதார சேவை மையம் மற்றும் 108 ஆம்புலன்சுகள் இணைந்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் கிடைப்பது, தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு மையமாக செயல்படும்.


இந்த மையமானது 24 மணி நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையவழி மூலமாக கண்காணிக்கும். பல்வேறு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள படுக்கை வசதிகளின் நிலையை அறிந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு அந்த படுக்கைகளை ஒதுக்கும் பணியில் ஈடுபடும்.

சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளை இந்த மையம் கண்காணிக்கும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய பணிகளையும் இந்த மையம் மேற்கொள்ளும்.

ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு வசதியாக ஒரு டுவிட்டர் கணக்கு (@104GoTN) தொடங்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் நேரடியாக இந்த டுவிட்டர் கணக்கை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை பெறலாம்.

நோயாளிகளின் அனைத்து கோரிக்கைகளும் இந்த மையத்தின் வழியாக கையாளப்படும். இதை மக்களிடையே கொண்டு சேர்க்க டுவிட்டர் கணக்கில் #BedsForTN என்னும் ஹேஷ்டாக் பயன்படுத்தப்படும்.

ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைப்பதற்காக பொதுமக்களும், ஆஸ்பத்திரிகளும் இந்த இலவச வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம். தமிழக அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த இந்த சிறப்பு மையம் ஒரு குறிப்பிடத்தக்க துணை கட்டமைப்பாக இருக்கும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சிறப்பு மையம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News