ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் காப்பு கட்டுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றபக்தர்களை படத்தில் காணலாம்.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கந்தசஷ்டி விழா: பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்

Published On 2020-11-16 05:28 GMT   |   Update On 2020-11-16 05:28 GMT
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.
முருக கடவுளுக்கு எடுக்கப்படும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த விழாவின் உச்ச நிகழ்ச்சியாக சூரனை, முருகன் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுதோறும் கோவில்களில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹார நிகழ்ச்சியும் பக்தர்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. விழா தொடக்கத்தில் இருந்து 6 நாட்கள் முருக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருப்பது வழக்கம். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் கடைபிடிப்பார்கள். பலர் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து விரதம் இருப்பார்கள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கந்தசஷ்டி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் நடை வழக்கம்போல் திறக்கப்பட்டு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி விழாவையொட்டி பாலமுருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆனால் அபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

காலை 7 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கந்த சஷ்டி விழா தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் நாகராஜா சன்னதி, பாலமுருகன் சன்னதிகளில் வழிபட்டுச் சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். பாலமுருகன் சன்னதியில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். விரதம் இருப்பவர்கள் கோவிலில் தங்கியிருக்க அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக நேற்று நாகராஜா கோவிலுக்கு காப்புக்கட்ட வந்த பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்ததாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

கந்தசஷ்டி விழாவின் 6- வது நாளான 20-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று காப்பு கட்டுடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு உஷபூஜை, 10.30 மணிக்கு அபிஷேகம் தொடர்ந்து காப்புக்கட்டு, மதியம் தீபாராதனை போன்றவை நடந்தது. விழா வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி தீபாராதனை, அபிஷேகம் போன்றவை நடைபெறும். 20-ந் தேதி மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன், கோவில் முன்னேற்ற சங்கத்தினர் செய்துள்ளனர்.

இதேபோல் குமாரகோவிலில் உள்ள முருகன் கோவில் உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் அனைத்திலும் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.
Tags:    

Similar News