செய்திகள்
அமித்ஷா

ராகுல் காந்தி சுற்றுலா அரசியல்வாதி - அமித்ஷா கிண்டல்

Published On 2021-04-16 13:37 GMT   |   Update On 2021-04-16 14:24 GMT
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீதும் அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் சனிக்கிழமை 5-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வீரியமிக்க பிரசாரத்தை தொடர்ந்து வருகின்றன. அந்தவகையில் வங்காளதேசத்தை ஒட்டியுள்ள நாடியா மாவட்டத்தின் டெகட்டாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுற்றுலா அரசியல்வாதி என கிண்டலடித்தார். மாநிலத்தில் இந்த தேர்தலில் வெறும் 2 பிரசார கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றதற்காக ராகுல் காந்தியை இவ்வாறு அவர் கூறினார்.

அவர் கூறுகையில், ‘மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் பெரும்பாலும் முடிவடையும் நிலையில் ஒரு சுற்றுலா அரசியல்வாதி வந்திருக்கிறார். அப்படியே நமது டி.என்.ஏ. குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பா.ஜனதாவின் டி.என்.ஏ. வளர்ச்சி, தேசியவாதம் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவை ஆகும்’ என்று தெரிவித்தார்.



மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீதும் அமித்ஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தில் தலித் மதுவா, நாம்சூத்ரா சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வகிறார்கள். சுமார் 70 ஆண்டுகளாக, 3 தலைமுறைகளாக வசித்து வரும் அவர்களுக்கு குடியுரிமையை மம்தா பானர்ஜி மறுத்து வருகிறார்.ஏனெனில் அவரது வாக்கு வங்கி இதை விரும்பாது. ஆனால் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால், இந்த சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி நிதி உருவாக்கப்படும்.

மேற்கு வங்காளத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை அமல்படுத்த பா.ஜனதா விரும்புகிறது. ஆனால் மம்தா பானர்ஜியோ தனது மருமகன் (அபிஷேக் பானர்ஜி) சம்மான் நிதியை விரும்புகிறார்.

மாநிலத்தில் மே 2-ந் தேதிக்கு பிறகு அப்படி எந்த சிண்டிகேட் அரசும் மாநிலத்தில் இருக்காது. மக்களின் பணத்தை கொள்ளையடிக்க யாரும் இருக்கமாட்டார்கள். மருமகனுக்காக செயல்படும் அரசு அகற்றப்படும்.

மாநிலத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் ஏழைகளின் உணவுகளை பறிக்கும் ஊடுருவல்காரர்களை தடுக்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. ஊடுருவல்காரர்களின் அதிகரிப்பால் நாடியா மாவட்டத்தின் மக்கள் தொகையே மாறிவிட்டது.இப்படிப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் மட்டுமல்ல, எல்லைக்கு அப்பால் இருந்து ஒரு பறவை கூட இங்கு வருவதற்கு அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.
Tags:    

Similar News