ஆன்மிகம்
சென்னகேசவ பெருமாள்

கொரோனா பரவல்: சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா ரத்து

Published On 2021-04-16 06:36 GMT   |   Update On 2021-04-16 06:36 GMT
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் மற்றும் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மலைமீது இருந்து சுவாமியை கொண்டுவந்து மண்டபத்தில் வைத்து கொடியேற்றத்துடன் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.அதன்பிறகு பல்வேறு அலங்காரங்களுடன் தினசரி சாமி வீதி உலா நடத்தவும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி சித்திரை தேர்த்திருவிழா நடைபெறவும் இருந்தது.

முக்கிய வீதிகள் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டு தேர் நிலைக்கு வந்து சேரும். இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி மலைமீது சுவாமி எழுந்தருளும் வைபவத்துடன் சித்திரை ேதர்த்திருவிழா நிறைவு பெறும்.

இந்த நிலையில், சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் மற்றும் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை ரத்து செய்து, சங்ககிரி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கஸ்தூரி அறிவித்துள்ளார்.

மேலும், 18-ந் தேதி முதல் கோவில் மண்டபத்தில் சென்ன கேசவ பெருமாள் உற்சவர் சிலை, தினசரி பல்வேறு அலங்காரங்களுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும் என்றும், சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News