செய்திகள்
வாலிபருக்கு கத்திகுத்து

கூடங்குளத்தில் செல்போன் விளையாட்டு தகராறில் வாலிபர்-நண்பருக்கு கத்திகுத்து

Published On 2021-02-22 08:24 GMT   |   Update On 2021-02-22 08:24 GMT
கூடங்குளத்தில் செல்போன் விளையாட்டு தகராறில் வாலிபர்-நண்பருக்கு கத்திகுத்து விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் சூர்யா(வயது 20). மாற்றுத்திறனாளி. இவர் தனது செல்போனில் கேம் ஒன்றை டவுன்லோடு செய்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அதற்கான ஐ.டி. யை தனது நண்பரான மேலத்தெருவை சேர்ந்த லிங்கராஜாவிடம் அவர் கொடுத்துள்ளார். அதனை சில நாட்கள் பயன்படுத்திய லிங்கராஜா, பின்னர் அந்த ஐ.டி.யை அதே தெருவை சேர்ந்த அவரது நண்பர் நவீன் என்பவரிடம் கூறி உள்ளார்.

இதனை அறிந்த சூர்யா தனது ஐ.டி.யை பயன்படுத்தக்கூடாது என்று நவீனிடம் கூறி உள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நவீன், தனது நண்பரான சூர்யபிரகாசை அழைத்துக்கொண்டு சூர்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இவர்கள் 2 பேரும் சேர்ந்து சூர்யாவை கீழே இழுத்து போட்டு அடித்து உதைத்துள்ளனர். இதனை அந்த பகுதியில் இருந்த சூர்யாவின் நண்பர்கள் பார்த்து அங்கு ஓடி வந்தனர்.

அவர்களில் ஒருவர் அங்கு கிடந்த கத்தியை எடுத்து சூர்யபிரகாஷ், நவீனை சரமாரியாக குத்தினர். இதில் அவர்களுக்கு கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்திகுத்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக நவீன் அளித்த புகாரின்பேரில் சூர்யா தரப்பினரான மணிகண்டன் உள்பட 6 பேர் மீதும், சூர்யா அளித்த புகாரின்பேரில் நவீன் தரப்பினர் 3 பேர் மீதும் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபோன்ற விளையாட்டுகளால் கொலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. தங்களை மறந்து விளையாட்டில் மூழ்கும் சிறுவர்கள், வாலிபர்கள் சில நேரங்களில் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் அளவிற்கு தவறு செய்து விடுகின்றனர். எனவே இதுபோன்ற விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News