செய்திகள்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

Published On 2019-11-14 10:20 GMT   |   Update On 2019-11-14 11:28 GMT
நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

சிவகாசி:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் சிவாஜியை பற்றி மோசமாக பேசி இருக்கிறார். ஜெயலிதா மறைவுக்கு பிறகு எப்படியோ முதல்-அமைச்சராக வந்து இருப்பவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

சிவாஜிக்கு தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம், எம்.ஜி. ஆருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முயன்றதால் தான்.

அந்த தேர்தலில் சிவாஜி, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பார். இதை தான் கருணாநிதியும் விரும்பினார்.

இனிவரும் காலங்களில் சிவாஜியை பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிவாஜி ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை எடப்பாடி பழனிசாமி பெற வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. தலைவர் ஆகியோர் விரைவில் சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து விரிவாக பேசி முடிவு செய்வார்கள்.

தேர்தல் நியாயமாக நடைபெற்று இருந்தால் நாங்குனேரியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கும். உள்ளாட்சி தேர்தலை 5 கட்டமாக நடத்த உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அவ்வாறு எப்படி நடத்த முடியும்? என்று தெரியவில்லை. 5 கட்டமாக தேர்தல் நடந்தால் அங்கு தவறு நடக்க வாய்ப்பு ஏற்படும். 5 கட்டமாகத்தான் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டால் அதை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவது குறித்து தி.மு.க., காங்கிரஸ் பேசி முடிவு செய்யும்.

ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார். ஒவ்வொரு படம் ரிலீசுக்கு வரும்போதும், அவர் அரசியலுக்கு வருவதாக சொல்வார். ஆனால் வரமாட்டார்.

அரசியலுக்கு வரக்கூடிய தைரியம் அவரிடம் இல்லை. கமல்ஹாசன் யாருக்கும் புரியாத முறையில் அழகாக பேசிக் கொண்டு இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு என்ன தண்டனை என்று நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டனர்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார். இப்போது துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்று இருக்கிறார். துணை முதல்- அமைச்சர் பெயர் அமெரிக்காவில் கொடி கட்டி பறக்கிறது.

தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது ரூ.350 கோடி செலவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். அதற்காக அமெரிக்காவில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News