ஆன்மிகம்
உற்சவர் கபிலேஸ்வரர்

பிரம்மோற்சவ விழா: உற்சவர் கபிலேஸ்வரர் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Published On 2021-03-12 05:56 GMT   |   Update On 2021-03-12 05:56 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை தேரோட்டம் (போகிதேரு) நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதையடுத்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை அர்ச்சகர்கள் ஏகாந்தமாக உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நந்தி வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.

மகா சிவராத்திரியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் நடைபெறும். சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News