ஆன்மிகம்
மாசித் தெப்ப திருவிழா கொடியேற்றம், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா தொடங்கியது

Published On 2021-02-19 06:00 GMT   |   Update On 2021-02-19 06:00 GMT
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவையொட்டி தினந்தோறும் சவுமிய நாராயண பெருமாள் அனுமன் வாகனம், கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம், அன்ன வாகனம், வெண்ணை தாழி சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

23-ந்தேதி அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும்,24-ந்தேதி அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.26-ந்தேதி அன்று பகல் 12 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி அன்று காலை 10.50 மணி முதல் 11.58 மணிக்குள் பகல் தெப்ப திருவிழாவும்,, இரவு 9 மணிக்குள் மின்னொளியில் தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து கோவில் தெப்பக்குளத்தில் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி விளக்கேற்றி வழிபாடு செய்வது தனிச்சிறப்பாகும்.

மறுநாள் (28-ந்தேதி) அன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News