செய்திகள்
மோசுல் அருங்காட்சியகம்

ஐஎஸ் பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

Published On 2020-11-27 17:59 GMT   |   Update On 2020-11-27 17:59 GMT
ஐஎஸ் பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்:

ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா, ரஷியா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து அப்பாவி பொதுமக்கள் மீதும் அரசு படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதிகள் பலரும் கைது செய்யப்பட்டு ஈராக், சிரியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்தனர். 

மேலும், பல்வேறு புராதான மற்றும் மதிப்பு மிக்க சிலைகளையும், வரலாற்று சின்னங்களையும் அழித்தனர். புராதான சிலைகள் மற்றும் வரலாற்று சின்னங்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் அழிப்பது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. 

தற்போது ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவடைந்ததையடுத்து, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஈராக் அரசு படையினர் மீட்டுள்ளனர். அந்த வகையில், ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தை ஈராக் அரசுப்படையினர் 2017-ம் ஆண்டு மீட்டனர். 

அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த புராதான சிலைகள் ஐஎஸ் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்டதையடுத்து, அவற்றை மீண்டும் நிறுவுவதற்கான பணிகளை ஈரான் அரசு மேற்கொண்டு வந்தது.

அதன் பயனாக பயங்கரவாதிகளால் சேதப்படுத்தப்பட்ட மோசுல் நகர அருங்காட்சியகம் மீண்டும் சீரமைக்கப்பட்டு உடைக்கப்பட்ட சிலைகள் மீண்டும் வடிவமைக்கப்பட்டு புதிதாக சிலைகள் நிறுவப்பட்டன.

இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் புதிய சிலைகள் மற்றும் வரலாற்று சின்னங்கள் புனரமைக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. 

அந்த சிலைகள் மற்றும் வரலாற்று சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால், அருங்காட்சியகம் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது. 
Tags:    

Similar News