லைஃப்ஸ்டைல்
போதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்

போதைப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்

Published On 2019-09-11 08:01 GMT   |   Update On 2019-09-11 08:01 GMT
மது மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.
உலக அளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதார பிரச்சினையாக உள்ளது. இப்படி போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது.

உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் சிகரெட், மது மற்றும் போதைப் பொருள் பழக்கமானது ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்திலும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒருவர் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண குடி மற்றும் போதைப் பொருட்களை நாடுகிறாரோ, அவருக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அந்தப் பொருட்களின் துணையுடனே அவர் தீர்வு காண முயற்சிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி ஏதோ ஒரு விதத்தில் ஒரு போதைப் பொருளை முதலில் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் நாட்கள் செல்லச் செல்ல அடுத்தடுத்து எல்லா வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்திப் பார்க்க விரும்புகிறார்கள்.

போதைப் பொருள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை வேதிப்பொருள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணர்வும், சந்தோஷமும் கிடைப்பதாக அதைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர்.

போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்களுக்கு நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக் குழப்பம் போன்ற பிரச்சினை உண்டாகிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மது உடலின் உள்ளே செல்லச் செல்ல நம் உடலிலுள்ள வைட்டமின்களை அது அழித்து விடுகிறது.

மேலும் கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது. தற்போது மது மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிக அளவு கலப்பதால் பெரும்பாலானோர் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.

போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமூகத்தில் மரியாதை குறைவு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் பணப் பிரச்சினைகளும் உண்டாகிறது.
Tags:    

Similar News