செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு- 3 மாதங்கள் வரை நீடிக்கும்

Published On 2021-05-03 05:49 GMT   |   Update On 2021-05-03 05:49 GMT
மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு இது வரை ஆர்டர் கொடுக்கவில்லை.

புதுடெல்லி:

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும், கோவேக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத்பயோடெக் நிறுவனமும் தயாரித்து வருகின்றன.

இரு நிறுவனங்களிடமும் இருந்து மத்திய அரசு தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட்டு வந்தது.

சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி டோஸ் மருந்துகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் மருந்துகளையும் மத்திய அரசு கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்து இருந்தது.

அந்த மருந்துகளை இரு நிறுவனங்களும் தயாரித்து வழங்கி வருகிறது. ஆர்டர் கொடுத்த மருந்துகளை இந்த மாதம் மத்தியில் சப்ளை செய்து முடித்துவிடுவோம் என்று மருந்து நிறுவனங்கள் கூறி உள்ளன.


மேலும் மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு இது வரை ஆர்டர் கொடுக்கவில்லை.

ஏற்கனவே மத்திய அரசு பெற்ற மருந்துகளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் பகிர்ந்து கொடுத்தது. அந்த மருந்துகள் பல மாநிலங்களில் முடிந்துவிட்டன.

இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 1-ந்தேதி தொடங்கி இருக்கிறது. ஆனால் தடுப்பூசி போட மருந்து இல்லாததால் இந்த திட்டத்தை தொடங்கவில்லை. தற்போது பல மாநிலங்கள் தடுப்பூசி மருந்து இல்லாமல் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்த தட்டுப்பாடு இன்னும் 2 அல்லது 3 மாதம் கழித்தும் நீடிக்கும் என்று சீரம் நிறுவன அதிபர் ஆதர் பூனவல்லா கூறியிருக்கிறார். அவர் இதுபற்றி தெரிவித்ததாவது:-

தற்போது எங்கள் நிறுவனத்தில் மாதத்துக்கு 6 கோடி முதல் 7 கோடி மருந்து வரை உற்பத்தி செய்து வருகிறோம். இதை 10 கோடியாக உயர்த்த திட்ட மிட்டுள்ளோம். மருந்து வேண்டும் என்று எங்களுக்கு அதிக ஆர்டர்கள் வந்தால் தான் உற்பத்தியை உருவாக்கம் செய்ய முடியும்.

நாங்கள் ஏற்கனவே விரிவாக்கம் செய்வதற்கு தயாராக இருந்தோம். ஆனால் சரியான ஆர்டர் வரவில்லை. ஜனவரி மாதம் வாக்கில் நோய் தாக்கம் குறைந்துவிட்டதால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

எனவே கூடுதல் ஆர்டர் வராததால் விரிவாக்கம் செய்யவில்லை. இப்போது மத்திய அரசிடம் இருந்து புதிதாக எந்த ஆர்டரும் வர வில்லை. ஏற்கனவே ரூ.3 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கியது. அதைவைத்து விரிவாக்கம் செய்து வருகிறோம்.

இப்போது பல மாநில அரசுகளும் ஆர்டர் கொடுத்துள்ளன. எனவே உற்பத்தியை பெருக்க இருக்கிறோம். தற்போதைய தட்டுப்பாடு இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் சரியாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News