ஆன்மிகம்
வீட்டில் பூஜை

வாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

Published On 2021-02-15 03:55 GMT   |   Update On 2021-02-15 03:55 GMT
நாளை சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.
வளமான எதிர்காலம் வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசையும் பிரார்த்தனையும். அதற்கு நிகழ்காலத்தில் உழைப்பும் சேமிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும் வேண்டுதலும்! சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.

சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம் உண்டு. அம்பாள் என்கிற மகாசக்தியை எப்போது வணங்கினாலும் எப்போதும் நம்மைக் காத்தருள்வாள் தேவி!

‘பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் தை மாதத்தின் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்! என்றார்.

நாளை செவ்வாக்கிழமை வசந்த பஞ்சமி. அம்பிகையைக் கொண்டாடுவதற்கு உரிய அற்புதமான நாள்.

இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம்.

அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.

முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!
Tags:    

Similar News