செய்திகள்
2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் 2-வது நாளாக மறியல் - 4 பேர் கைது

Published On 2021-11-25 13:40 GMT   |   Update On 2021-11-25 13:40 GMT
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தட்சிணாமூர்த்திக்கும், ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த தினகரன் மகள் அபிதா (வயது 23) என்பவருக்கும் கடந்த 26.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அபிதாவின் தாயார் சம்பூர்ணம்(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தட்சிணாமூர்த்தி, இவரது தந்தை ஆறுமுகம், தாய் மல்லிகா, தம்பி முருகன், அக்காள்கள் முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அபிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனால் நேற்று காலை வரையில் அபிதாவின் தற்கொலை காரணமாக யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் செஞ்சி கூட்டுச்சாலையில் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் ஆகியோர் அபிதாவின் கணவர் வீட்டுக்கு சென்று தட்சிணாமூர்த்தி(27), இவரது தந்தை ஆறுமுகம்(60), தாய் மல்லிகா(52), தம்பி முருகன்(25) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News