செய்திகள்
தியேட்டரில் ரசிகர்கள் குவிந்தனர்

கேரளாவில் இன்று சினிமா தியேட்டர்கள் திறப்பு

Published On 2021-01-13 11:53 GMT   |   Update On 2021-01-13 12:28 GMT
10 மாதங்களுக்கு பிறகு கேரள மாநிலம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் இன்று திறக்கப்பட்டன.

திருவனந்தபுரம்:

கொரோனா பரவல் காரணமாக கேரள மாநிலத்தில் கடந்தஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதி சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், சினிமா தியேட்டர்களை கடந்த 5-ந்தேதி முதல் திறக்க அனுமதி வழங்கியது.

ஆனால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடிக் கிடந்ததால் வருமானம் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதித்து அவதிப்படுவதால், பல்வேறு சலுகைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சினிமா தியேட்டர்களின் மின்சார நிலைக்கட்டணத்தை 50சதவீதமாக குறைத்தல், நில வரியை மாத தவணைகளாக செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சினிமா தியேட்டர்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

கொச்சியில் நடந்த பிலிம் சேம்பர் நிர்வாகிகள் அவசர கூட்டத்தில் சினிமா தியேட்டர்கள் இன்றுமுதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மூடிக் கிடந்த தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி மேற் கொள்ளப்பட்டது. மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் தியேட்டர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

50 சதவீத இருக்கைகளையே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கு தகுந்தாற்போல் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் இன்று திறக்கப்பட்டன.

முதல் படமாக நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் வெளியானது. அனைத்து சினிமா தியேட்டர்களிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பட்டது.

மேலும் படம் பார்க்க வந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்யும் திரவம் வழங்கப்பட்டது. 10 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருப்பதால் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News