செய்திகள்
தீப்பிடித்து எரிந்த புதுவை மாநில பஸ்

புதுவை மாநில பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

Published On 2021-08-06 13:21 GMT   |   Update On 2021-08-06 13:21 GMT
பொறையாறு அருகே புதுவை மாநில பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் இருந்து புதுவை மாநில அரசு பஸ் இன்று காலை 30 பயணிகளுடன் காரைக்காலுக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செந்தில் (வயது 40) ஓட்டினார். கண்டக்டராக பரசுராமன் (46) பணியாற்றினார். அந்த பஸ் பொறையாறு பஸ் நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் காரைக்காலுக்கு புறப்பட்டது. அப்போது பொறையாறு ராஜீவ்புரம் பகுதியில் சென்றபோது எஞ்சின் மின்இணைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டு பஸ் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் உடனடியாக பஸ்சை டிரைவர் செந்தில் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்து கொண்டு வேகமாக சிதறி நாலாப்புறமும் ஓடினர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதியே தீப்பிளம்பாக காட்சியளித்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. பயணிகள் உடனடியாக இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றி பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News