செய்திகள்
முல்லைப் பெரியாறு அணையின் எழில் மிகு தோற்றம்.

125-வது ஆண்டை எட்டிய முல்லைப்பெரியாறு அணை

Published On 2019-10-10 05:37 GMT   |   Update On 2019-10-10 05:37 GMT
முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு 125 ஆண்டை எட்டியதை தொடர்ந்து விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 18-ம் நூற்றாண்டு தென் தமிழகத்தில் விவசாயம் நலிவடைந்ததால் பொதுமக்கள் பசி மற்றும் பட்டினியால் வேறு ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்றனர்.

எனவே இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க புதிய அணை கட்ட வேண்டும் என பலர் முயற்சி மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சிவகிரி மலையில் தோன்றி பெருந்துறை ஆறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பணை ஆறு, இடமலையாறு மற்றும் முல்லைப் பெரியாறு ஆகியவை அரபிக் கடலில் கலந்தது.

இந்த தண்ணீரை தென் தமிழகம் நோக்கி திருப்ப முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக 1798-ல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் முதல் முறையாக முயற்சி எடுத்தார். அதனைத் தொடர்ந்து பலர் இப்பகுதியில் அணை கட்ட முயற்சி செய்து சரியான திட்டமிடல் இன்றி நிதி பற்றாக்குறை காரணமாக அந்த முயற்சிகள் தோல்வியடைந்தது.

இறுதியாக பிரிட்டிஷ் அரசு அனுமதியுடன் என்ஜினீயர் கர்னல் ஜான் பென்னி குவிக் இதற்கான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதன்படி முல்லைப் பெரியாறு குன்றுகளையும் மலைகளையும் கடந்து ஓடும் போது கடந்து செல்ல வேண்டிய குறுகிய, ஆழமான மலைப்பகுதியில் ஒரு அணை கட்டி அந்த தண்ணீரை வைகை நதியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அணை கட்டினால் தேக்கப்படும் தண்ணீர் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குள் வருவதால் அதற்கும் முட்டுக்கட்டை எழுந்தது.

பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அணையின் நீர் எல்லா காலங்களிலும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 999 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரூ.43 லட்சம் திட்ட மதிப்பில் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணையை கட்டும் பணியை மேற்கொண்டது.

நிதி பற்றாக்குறை காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்ட போது பென்னி குவிக் இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்று தீவிர முயற்சி மேற்கொண்டு 1895-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடித்தார். அன்று காலை தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 124 ஆண்டுகள் கடந்து 125-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இத்தனை காலமாக தங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் கொடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குவிக்கை அப்பகுதி விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரது பிறந்த நாளின் போது பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இன்று 125-வது ஆண்டை கொண்டாடும் விதமாக விவசாய சங்கங்கள் முல்லைப் பெரியாறு அணை மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் பெரியாற்றங்கரையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இது தங்களுக்கு நீர் வழங்கி வரும் அணைக்கு விவசாயிகள் செய்யும் நன்றிக்கடனாக உள்ளது.



முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.90 அடியாக உள்ளது. 685 கன அடி நீர் வருகிற நிலையில் 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 60.89 அடியாக உள்ளது. 1156 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1860 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 42 அடி. 47 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.34 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை பகுதியில் மட்டும் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

Tags:    

Similar News