ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவில்

சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 28-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-10-21 06:50 GMT   |   Update On 2019-10-21 06:50 GMT
சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 28-ந்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது.
மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலானது வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த தலம், அவ்வையாருக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று முருகன் கேட்டு நாவல் மரத்தில் இருந்து காட்சி தந்த புனித தலமாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி திருவிழா நடைபெறும். திருவிழாவின்போது நாவல்பழம் பழுக்கும் தல விருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வருகிற 28-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடை பெறும். பின்னர் உற்சவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். இத்துடன் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தின் வழியாக புறப்பாடு நடைபெறும். முன்னதாக மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

பின்னர் மறுநாள் 29-ந்தேதி வழக்கமான பூஜைகளும், காமதேனு வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். 30-ந்தேதி யானை வாகனத்திலும், 31-ந்தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும், வருகிற 1-ந்தேதி சப்பர வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறும். 2-ந்தேதி காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம், குதிரை வாகன புறப்பாட்டுடன் தொடங்கும். அன்று மாலை 4.30 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். பின்னர் அதே வாகனத்தில் 5.30 மணிக்கு முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்னிதிக்கில் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்து, தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார காட்சிகள் நடைபெறும். தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெறும்.

3-ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீராட்டுதல் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News