செய்திகள்
கோப்பு படம்.

கிணத்துக்கடவு அருகே நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கோழிக்கடை உரிமையாளர்

Published On 2021-03-02 10:38 GMT   |   Update On 2021-03-02 10:38 GMT
கிணத்துக்கடவு அருகே அவமானப்படுத்தி கடனை திருப்பிக்கேட்டதால் விரக்தி அடைந்த கோழிக்கடை உரிமையாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை செட்டியக்கா பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

விஜயகுமார் 3 கறிக்கோழிக்கடை நடத்தி வருகிறார். இதுதவிர தண்ணீர் கேன் சப்ளையும் செய்து வருகிறார். இவர் தாமரைக்குளத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வட்டிக்கு வாங்கியுள்ளார். ரூ.10 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதி பணத்தை செலுத்த காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆட்டோவில் தண்ணீர் கேன் சப்ளை செய்ய புறப்பட்டார். அப்போது கடன் கொடுத்தவர் ஆட்டோவை வழிமறித்து பணத்தை திருப்பி கேட்டார். அப்போது நாளை தருகிறேன் என்று விஜயகுமார் கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கடன் கொடுத்தவர் தகாத வார்த்தைகளால் பேசி தள்ளிவிட்டதாக தெரிகிறது.

இதனால் அவமானம் அடைந்த விஜயகுமார் ஆட்டோவில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அதில் அதிர்ச்சியடைந்த கடன் கொடுத்தவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் விஜயகுமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரது மனைவிக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் விஜயகுமாரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைச்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News