ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் அம்பாளின் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை

ராமேசுவரம் கோவிலில் அம்பாளின் தங்க சக்கரத்திற்கு சிறப்பு பூஜை

Published On 2021-10-09 07:11 GMT   |   Update On 2021-10-09 07:11 GMT
ராமேசுவரம் கோவில் நவராத்திரி திருவிழாவின் 2-வது நாளான இன்று அம்பாள் அன்னபூரணி அலங்காரத்திலும், மூன்றாவது நாளான நாளை சிவதுர்க்கை அலங்காரத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில் முதல் நாளான நேற்று இரவு 7 மணி அளவில் பர்வதவர்த்தினி அம்பாள் மகாலட்சுமி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகளும் நடைபெற்றன. முன்னதாக காலை 11 மணி அளவில் கொலுமண்டபம் முன்பு அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பால், பன்னீர், இளநீர், தேன், மாப்பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

இறுதியாக புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்க ஸ்ரீசக்கரத்திற்கு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. தங்க ஸ்ரீசக்கர பூஜை மற்றும் மகாலட்சுமி அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். மேலும் நவராத்திரி திருவிழா நடைபெறும் இந்த 9 நாட்கள் மட்டுமே தான் அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.

திருவிழாவின் 2-வது நாளான இன்று அம்பாள் அன்னபூரணி அலங்காரத்திலும், மூன்றாவது நாளான நாளை சிவதுர்க்கை அலங்காரத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 15-ந் தேதி சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கமாக நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான சாமி அம்பு எய்தல் நிகழ்ச்சியானது ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த உப கோவிலான பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள திடலில் வைத்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாபரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலின் உள்ளேயே இந்த ஆண்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News