உள்ளூர் செய்திகள்
நெல் கொள்முதல்

அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

Published On 2022-01-21 10:21 GMT   |   Update On 2022-01-21 10:21 GMT
திருவாடானை பகுதியில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் இரு தாலுகாவிலும் சேர்த்து சுமார் 42 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர் சாகுபடி செய்தனர். 

இதில் திருவாடானை தாலுகா பகுதியில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கடந்த ஆண்டைப் போலவே நெற்பயிர் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டைப் போலவே மகசூல் கிடைக்கும் என நம்பி இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்த பகுதியில் குறுகிய கால நெற்பயிர்களான ஆர்.என்.ஆர். 110 நாட் களில் அறுவடைக்கு தயா ராகிவிடும். டீலக்ஸ் ரக நெற்பயிர்கள் சுமார் 140 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.  சில நாட்களில் பெய்த தொடர் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 3&ல் 1 பங்கு மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியது மட்டுமல்லாமல் பயிர்களில் குலைநோய் தாக்கத்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை.

இது சம்பந்தமாக துத்தாகுடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:-

நெற்பயிர்களை அறுவடை செய்ய பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் இருந்து வரும் செயின் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3,300 கூலியாக கேட்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஏக்கர் மட்டுமே அறுவடை செய்ய முடியும். 

வயல்களில் ஈரப்பதம் உள்ளதால் செயின் அறுவடை எந்திரத்தால் மட்டுமே அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த செயின் எந்திரங்களுக்கு புரோக்கர்கள் உள்ளதால் கூலியை குறைக்க மறுக்கிறார்கள். இது தவிர டயர் எந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ. 1,800 கூலி கேட்கிறார்கள். டயர் அறுவடை எந்திரத்தால் ஈரப்பதம் உள்ள வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. 

இந்நிலையில் அறுவடை செய்த நெல் பற்றிய பல்வேறு குறைகளை கூறி ரூ. 800 மட்டுமே வியாபாரிகள்  தருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் 1 ஏக்கருக்கு 30 மூடை வரை நெல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால் 1 ஏக்கருக்கு 10 மூடை கிடைப்பதே அரிதாக உள்ளது. எனவே கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை அரசே நேரடியாக கொள்முதல் செய்தால் 1 மூடைக்கு ரூ. 1,100 விலை கிடைக்கும். எனவே இப்பகுதி விவசாயிகளின் நிலை அறிந்து விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்க அரசே நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு  அவர் கூறினார். 

மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள லெவி எனப்படும் நெல் கொள்முதல் நிலையத்தை இப்பகுதியில் உடனடியாக தொடங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

Tags:    

Similar News