செய்திகள்
கொரோனா வைரஸ்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: கோவையில் பொது இடங்களுக்கு செல்ல சான்றிதழ் கட்டாயம்

Published On 2021-09-11 04:28 GMT   |   Update On 2021-09-11 04:28 GMT
அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை:

கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.

அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அன்னூர் ஒன்றியத்தில் 123 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாம்களில் 1,450 பேருக்கு தடுப்பூசிகள் இருப்பு வைத்திருந்த நிலையில் வெறும் 383 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து மாவட்டத்தில் உள்ள ஜவுளி, நகை, பெரிய வணிக வளாகங்கள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள வணிக வளாகங்கள், டாஸ்மாக், ஜவுளிக்கடைகள், பொழுதுபோக்கு மையங்கள், உடற் பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை மட்டுமே தங்களது நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News