செய்திகள்
தற்கொலை

கொரோனாவால் வேலையிழப்பு-கடன் சுமை: வாலிபர் தற்கொலை

Published On 2021-04-21 09:04 GMT   |   Update On 2021-04-21 09:11 GMT
கொரோனா வேலையிழப்பால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி:

கொரோனா பரவல் காரணமாக அன்றாட கூலித் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்துள்ளனர். கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் தளர்வுகள் அடிப்படையில் மீண்டு வந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் வேலையிழப்பால் திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:-

திருச்சி பெரிய மிளகுப் பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30). இவர் கடந்த ஆண்டு வரை திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பணியில் இருந்து இவரை நிர்வாகம் நீக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து கிடைத்த வேலைகளை செய்து வந்தார். கடந்த சில மாதங்களில் மட்டும் பேட்டரி ரீசார்ஜ் கடை மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் வேலை செய்தார். அங்கும் அவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. தனது அன்றாட செலவுகளுக்காக பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு திருமணம் ஆவதும் தொடர்ந்து தள்ளிப்போனது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். நேற்று அவரது வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கொரோனா வேலையிழப்பால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News