செய்திகள்
எம்பி வசந்தகுமார்

தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியின் மொத்த உருவம் வசந்தகுமார் எம்.பி.

Published On 2020-08-29 09:54 GMT   |   Update On 2020-08-29 09:54 GMT
கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தொகுதியில் முகாமிட்டு ஓடி ஓடி சென்று உதவிய வசந்தகுமாரை கொரோனா சொந்த ஊரில் ஓய்வெடுக்க வைத்துவிட்டது.
மறைந்தார் வசந்தகுமார் என்று சூரியன் மறையும் நேரத்தில் காதில் வந்து விழுந்த சேதியை தமிழக மக்களால் ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.

தும்பை பூ வெண்மையில் பளிச்சென்று வெள்ளை நிற பேன்ட்-சட்டை! எப்போதும் கழுத்தை அலங்கரித்த காங்கிரஸ் துண்டு! புன்னகை மாறாத முகம்! மறைந்தாலும் மறக்க முடியாது.

ஏனெனில் தமிழகம் முழுவதும் மக்கள் அடிக்கடி பார்த்த முகம். 64 கிளைகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் பரவி படர்ந்துள்ள தனது வசந்த் அன்ட் கோ நிறுவனத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பார்.

இந்தியாவின் கடைகோடி நகரமான கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து இந்திய பாராளுமன்றம் வரை சென்றவர்.

தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி இந்த மூன்றின் மொத்த உருவம்தான் வசந்தகுமார். இதன்மூலம்தான் இவ்வளவு உயர்ந்த சிகரத்தை தொட முடிந்தது. வெற்றிக்கொடியை கட்ட முடிந்தது.

ஏழ்மையின் பிறப்பிடம் தான் வசந்தகுமார் பிறந்த இடம். அரிகிருஷ்ணன் நாடார்-தங்கம்மை தம்பதிகளுக்கு குமரி அனந்தன் உள்பட 5 ஆண் பிள்ளைகள். 6-வது இரட்டையர்களாக பிறந்தவர்கள் வசந்த குமார், வசந்த குமாரி.

சிறு வயதிலேயே ஊரில் திருவிழாக்கள் நடக்கும்போது ‘சர்பத்’ விற்பார். ஒரு டம்ளர் 2 காசு. வறுமையிலும் படிப்பை தொடர்ந்தார்.

மூத்த சகோதரரான குமரி அனந்தன் காமராஜரின் தீவிர பக்தர். அரசியலில் தீவிரமாக இருந்தார். இலக்கியம் கலந்த அவரது தமிழ்பேச்சு மக்களை கவர்ந்தது.

காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் அரசியல் மேடைகளில் குமரி அனந்தனுக்கு தனி இடம் உண்டு.

அவ்வாறு அண்ணன் பேசும் அரசியல் கூட்டங்களுக்கு வசந்தகுமாரும் செல்வார். அந்த நேரத்தையும் அவர் வீணாக்கவில்லை. அந்த கால கட்டத்தில் வசந்தகுமாரின் அண்ணன் தயாரித்த ‘குமரிபேனா’வுக்கு தனி மவுசு இருந்தது. ஒரு பேனாவின் விலை 4 அணா. அரசியல் கூட்டங்களில் வசந்தகுமார் அந்த பேனாவை விற்பார்.

எப்படியும் முன்னேறலாம் என்ற தன்னம்பிக்கை தான் அவரை வாழ்க்கையில் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு அழைத்து சென்றது.

1971-ல் குமரி அனந்தனை வண்ணாரப்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக காமராஜர் அறிவித்தார்.

அண்ணனுக்கு தேர்தல் வேலை செய்வதற்காக முதல் முதலாக சென்னைக்கு வந்தார். அந்த தேர்லில் குமரி அனந்தன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆனால் வாழ்க்கையில் வெற்றிப் பயணத்தை தொடங்கிய நேரம் அது. வேலை இல்லை. வேலை தேட தொடங்கி இருக்கிறார். எங்கும் வேலை கிடைக்கவில்லை.

அப்போது குமரி அனந்தனும், கவிஞர் ரவி பாரதியும் வசந்தகுமாரை அழைத்துக்கொண்டு வி.ஜி.பன்னீர்தாசிடம் சென்றிருக்கிறார்கள்.

கடற்கரை அலுவலகத்தில் மாதச்சம்பளம் ரூ.80-க்கு வேலை கொடுத்துள்ளார்கள்.

சைக்கிளில் வேலைக்கு சென்ற அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை, துடைப்பத்தால் அலுவலகத்தை சுத்தப்படுத்துவது, தண்ணீர் பிடித்து வைப்பது போன்றவை.

பட்டப்படிப்பு படித்துவிட்டு துடைப்பத்தை எடுத்து வேலை செய்வதில் வசந்தகுமார் தயக்கம் காட்டவில்லை.

வி.ஜி.பி. நிறுவனம் ரேடியோ, மின்விசிறி, கடிகாரம் போன்ற வீட்டு உபயோக பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்தது. அதில் விற்பனையாளராக இருந்த வசந்தகுமார் வீடு வீடாக தவணை தொகையை வசூலிக்க பல கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதிக்க வேண்டியிருந்தது. அதற்கும் அவர் சளைக்கவில்லை.

அந்த கடினமான உழைப்புதான் அவரை கிளை மேலாளர் பதவிக்கு உயர்த்தியது. மாத சம்பளமும் ரூ.300 ஆக உயர்ந்தது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வி.ஜி.பி. நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அவரது நிர்வாக திறமையை பார்த்து அவரை மும்பை அலுவலகத்துக்கு இடம் மாற்றினார்கள். ஆனால் வசந்தகுமார் மும்பை செல்ல விரும்பவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு நின்று விட்டார்.

விற்பனை துறையில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு தனியாக தொழில் செய்ய முடிவெடுத்தார். ஆனால் முதலீடு செய்வதற்கு அவரிடம் பணம் இல்லை.

ஆனால் அவர் சம்பாதித்து வைத்திருந்த வி.ஜி.பி.யின் வாடிக்கையாளர்களில் ஒருவர் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள தனது கடையை ரூ.8 ஆயிரத்துக்கு விற்க முன் வந்தார். 6 மாத தவணையில் அந்த கடையை வாங்கினார். மற்றொரு வாடிக்கையாளர் அவருக்கு 22 ரூபாய் கொடுத்திருக்கிறார். அதுவே அவரது மூலதனம்.

இப்படி தனது 28-வது வயதில் 1978-ல் வசந்த் அன்ட் கோ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

விளம்பர பலகை விலை கொடுத்து வாங்க கூட பணம் இல்லாமல் பேக்கேஜிங் பெட்டியில் இருந்த மரப்பலகையை எடுத்து உருவாக்கினார். அவர் விற்ற முதல் பொருள் ரூ.25 மதிப்புள்ள மடிப்பு நாற்காலிகள்.

1985-ல் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் அறிமுகமானபோதுதான் வசந்தகுமாரின் பயணம் புதிய வேகம் பிடித்தது. தனது வழக்கமான விற்பனை பொருட்களை தவிர தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பு நிறுவனங்களில் ஆர்டர் கேட்டார். ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டார். ஆனால் தனது அணுகுமுறையால் 960 டி.வி. பெட்டிக்களுக்கான ஆர்டரை பெற்றார்.

அவரது விற்பனை யுக்தியும், வாடிக்கையாளர் சேவையும் வாடிக்கையாளர்களை இழுத்து வந்தது.

முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தயாரிப்புகளை வசந்த் அன்ட் கோ விற்க வேண்டும் என்ற தேடி வந்தன. இப்படி பெருகிய வியாபாரத்தால் வசந்த் அன்ட் கோ கிளைகளும் தமிழகம் முழுவதும் பரவியது.

தொழிலில் காட்டிய அதே ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் அரசியலிலும் காட்ட தொடங்கினார். தனது அண்ணன் வழியில் தன்னை காங்கிரசில் ஈடுபடுத்திக் கொண்டார். கட்சியிலும் படிப்படியாக வளர்ந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றார்.

இரண்டு முறை நாங்குனேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

காமராஜரின் தீவிர தொண்டராக இருந்த வசந்தகுமார் காமராஜர் போட்டியிட்டு வென்ற தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையும் கடந்த தேர்தலில் நிறைவேறியது.

கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தொகுதியில் முகாமிட்டு ஓடி ஓடி சென்று உதவினார்.

இரக்கமற்ற கொரோனா அவரை முடக்கிப் போடுவதற்காக தொற்றிக்கொண்டு நிரந்தரமாக சொந்த ஊரில் ஓய்வெடுக்க வைத்துவிட்டது. வாழ்க்கையில் ஜெயித்தார். கொரோனாவிடம் தோற்று போய்விட்டார்.
Tags:    

Similar News