செய்திகள்
மோசடி

அரியலூர் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி- 5 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-09-10 11:09 GMT   |   Update On 2019-09-10 11:09 GMT
ரூ.50 கோடி கடன் பெற்று தருவதாக அரியலூர் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.67 லட்சம் மோசடி 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அங்கு ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் ஜவுளி கொள்முதலுக்காக அடிக்கடி சென்னை சென்ற போது சென்னையை சேர்ந்த வியாபாரி பாஸ்கர் என்பவர் அறிமுகம் ஆனார்.

அப்போது பாஸ்கர் முருகனிடம் உங்களது கடையை விரிவு படுத்த தனக்கு தெரிந்த வங்கிகள் மூலம் ரூ.50 கோடி கடன் குறைந்த வட்டியில் பெற்று தருவதாக கூறினார். இதற்கு முருகனும் சம்மதித்தார்.

இதன் பின்னர் பாஸ்கர் சேலத்தை சேர்ந்த அவரது நண்பர்கள் ரவிக்குமார், சக்திவேலுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள முருகனின் ஜவுளி கடைக்கு சென்றார். அப்போது கடன் தொகை பெற அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூறி ரூ. 1 லட்சம் வாங்கி சென்றார்.

இதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து பாஸ்கர், ரவிக்குமார், சக்திவேல் மற்றும் சென்னையை சேர்ந்த பரமசிவம் சுப்பிரமணியம், விஜயகுமார் ஆகிய 5 பேர் முருகன் ஜவுளி கடைக்கு சென்று ரூ.50 கோடி கடன் பெற கடைக்குரிய ஆவணங்களையும், மேலும் அட்வான்ஸ் கொடுக்க ரூ.32 லட்சம், ரூ.24 லட்சம் என மொத்தம் ரூ.67 லட்சத்தை வாங்கி சென்றனர். கடையை போட்டோவும் எடுத்து சென்றனர். அதன் பின்னர் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. முருகன் அவர்களது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகன் அரியலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. இளங்கோவன், குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் வாணி ஆகியோர் வழக்குபதிவு செய்து ரூ.67 லட்சம் பணமோசடி செய்த 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News