ஆன்மிகம்
கிரிவலப்பாதையில் உள்ள ஒலிப்பெருக்கிகளில் வயர் அறுந்து கிடப்பதை பட்டத்தில் காணலாம்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தினமும் ஆன்மிக பாடல் ஒலிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Published On 2021-09-06 06:03 GMT   |   Update On 2021-09-06 06:03 GMT
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பழுதடைந்த ஒலிப்பெருக்கிகளை சரி செய்து தினமும் ஆன்மிக பாடல் ஒலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பெரும்பாலான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மேலும் தினமும் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக பல கோடி ரூபாய் மதிப்பில் கிரிவலப்பாதையை விரிவுப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதன் மூலம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடப்பதற்கு நடை பாதை, ஆன்மிக பாடல்கள் ஒலிப்பதற்கு ஒலி பெருக்கிகள், எல்.இ.டி. மின் விளக்குகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கிரிவலப்பாதையை சுற்றியும் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட்டு ஆன்மிக பாடல்கள் ஒலிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக கிரிவலப்பாதையில் ஆன்மிக பாடல்கள் ஒலிப்பதில்லை என்றும், ஆன்மிக பாடல்கள் ஒலித்தால் மனம் மாறாமல் ஒரே சிந்தனையில் கிரிவலம் செல்ல பயனுள்ளதாக இருக்கும் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர். தற்போது கிரிவலப்பாதையில் உள்ள ஒலிபெருக்கிகளின் வயர்கள் அறுந்து காணப்படுகின்றது.

அதேபோன்று கிரிவலப்பாதையை கூடுதல் அழகுபடுத்த திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மூலம் அப்பகுதியில் பட்டுபோய் காணப்படும் மரங்களில் தரமான சுமார் 40-க்கும் மேற்பட்ட மரங்களில் கிளி, முதலை, பெண் குழந்தை, செல்போன், அணில் என பல்வேறு சிறப்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மர சிற்பங்களில் பெரும்பாலானவை சிதிலமடைந்தும், ஒரு சில மரசிற்பங்கள் உடைந்தும் காணப்படுகின்றது.

திருவண்ணாமலையின் முக்கிய அடையாளமாக கிரிவலம் உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி கிரிவலப்பாதையில் தினமும் ஆன்மிக பாடல்கள் ஒலிப்பதற்கும், சேதமடைந்து காணப்படும் மர சிற்பங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News